தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். கென்னடி ஜான் விக்டர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிறந்தவர். நடிகர், பின்னணி பாடகர் என பன்முக தன்மை கொண்ட இவர், 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று டி.ஜே .ஜாய் இயக்கத்தில் வெளியான என் காதல் கண்மணி படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மற்ற மொழிகளிலும் நடித்து வந்தார். பல தமிழ் படங்களில் நடித்து வந்தவர், 1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான சேது படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஒரு முரட்டுத்தனமான ஆண், ஒரு சாதுவான பெண்ணை காதலித்து, பின்னர் காதலையும், காதலியையும் இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட ஆணாக தோன்றிய சேதுவான விக்ரமின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பின்னர் அதே போன்று காசி, தூள், சாமி, பிதாமகன், அந்நியன், கந்தசாமி, தெய்வ திருமகள், ஐ, இருமுகன், கோப்ரா போன்ற பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை தன்வச படுத்திக்கொண்டார்.
மேலும் சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். இந்நிலையில், நடிகர் விக்ரம் திரைத்துறையில் அறிமுகமாகி 32 ஆண்டுகளை கடந்துள்ளார். அதாவது விக்ரமின் முதல் படமான என் காதல் கண்மணி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் அவர் திரைத்துறையில் கால்பதித்து 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், " இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடத்துக்கு நன்றி." என பதிவிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- சுஜிதா ஜோதி
இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே.