உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத்தின் மாஸான இசையில் உருவாகி கடந்த ஜீன் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களின் அட்டகாசமான நடிப்பில் வெளியான இப்படம், வசூலில் மாபெரும் சாதனையை புரிந்து வருகிறது. படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ்க்கு உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நெகிழ்ச்சியுடன் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த லோகோஷ், ’லைஃப்டைம் செட்டில்மெண்ட்’ என்று கூறி பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் லோகேஷை கனகராஜை அடுத்து ‘விக்ரம்’ படத்தில் நடித்த அர்ஜீன் தாஸ் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ’லைஃப்டைம் செட்டில்மெண்ட்’ என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஒரு கேரக்டர் இருக்கிறது என்று லோகேஷ் கனகராஜ் அழைத்தபோது எந்த கேள்வியும் கேட்காமல் சரி என்று கூறினேன். ஆனால் நான் நடித்த காட்சியில் ஒரு பக்கம் கமல் சார் மறுபக்கம் சூர்யா சார் இருந்ததால் என்னால் என்ன செய்ய முடியும் என்றே தெரியவில்லை. நாம் கொண்டாடி தீர்க்கின்ற இரண்டு நடிகர்கள் என் கண்முன் நின்றபோது அவர்களை பார்க்க மட்டுமே என்னால் முடிந்தது. அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் பார்த்ததே என் வாழ்வில் மிகச் சிறந்த அனுபவமாக கருதுகிறேன். இதைவிட எனக்கு வேறு எதுவும் தேவையில்லை.
அதுமட்டுமில்லாமல் எனக்கு பிடித்த மூன்று நபர்களான கமல் சார், சூர்யா சார் மற்றும் லோகேஷ் சார் ஆகியோருடன் இணைந்து ஒரே படத்தில் வேலை செய்துள்ளேன். கமல்ஹாசனை பார்ப்பதற்காக பல நாட்கள் நான் காத்திருந்த நிலையில் இன்று அவர் படத்தில் நடித்ததன் மூலம் எனது கனவு நனவாகி விட்டது. இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி. மேலும் ‘விக்ரம்’ படத்தில் நான் நடித்து இருக்கிறேன் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்களாகிய நீங்கள் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்துக் கூறுங்கள் என்று கேட்டீர்கள். ஆனால் அப்போது என்னால் கூற முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இப்போது உறுதியாக கூறுகிறேன். இந்த படத்தில் நடித்ததுதான் எனது ’லைப் டைம் செட்டில்மெண்ட்’ என்று கூறியுள்ளார். அர்ஜூன் தாஸின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.