பொழுதுபோக்கு

அப்பா நடிக்க...! மகள் இயக்க...! மீண்டும் இயக்கத்தில் இறங்கிய ஐஸ்வர்யா..!

Malaimurasu Seithigal TV

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது மீண்டும் இயக்கத்தில் களமிறங்கியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் தனுஷ் உடனான 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முடித்துக்கொள்வதாக இருவருமே தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தனர். இது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதன் பின்னர் இருவரும் தங்களது பணிகளில் பிசியாக இருந்து வந்த நிலையில், ஐஸ்வர்யா முஸாபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கியிருந்தார். இதற்கு நடிகர் தனுஷ் வாழ்த்துகள் தோழி என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தனுஷின் இந்த பதிவு, ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது ஒரு புறம் இருக்க, நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற தொடர்ந்து படங்களை கொடுத்து வருகிறார். மறுபுறம் ஐஸ்வர்யா, ஆல்பம் பாடல்களை இயக்கி வந்த நிலையில், தற்போது மீண்டும் படங்களை இயக்குவதில் களமிறங்கியுள்ளார்.

முன்னதாக 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய அவர், தற்போது ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். அதற்கு 'லால் சலாம்' என பெயரிடப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் முதலில் அதர்வா நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவருக்கு பதிலாக தற்போது விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார். மேலும் கூடுதல் தகவலாக நடிகர் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். 

இந்த நிலையில் இந்த படத்திற்கான பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் அதில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. 
முன்னதாக ரஜினியின் இளைய மகன் சௌந்தர்யா ரஜினிகாந்த் ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது முதல் முறையாக ஐஸ்வர்யா, ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

-- சுஜிதா ஜோதி