பொழுதுபோக்கு

"இருக்கிற எல்லாரும் அரசியலுக்கு வரணும்": திரைப்பட வெற்றி விழாவில், சரத்குமார் பேச்சு!

Malaimurasu Seithigal TV

திருச்சி: போர் தொழில் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், திருச்சியில் ரசிகர்களை சந்தித்தனர் படக்குழுவினர். அப்பொழுது நடிகர் சரத்குமார், நடிகர் விஜய் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்த போர் தொழில் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியானது. முதலில் இந்த படத்திற்கு குறைந்த திரையரங்குகளை ஒதுக்கப்பட்டு இருந்தாலும் நல்ல விமர்சனங்களால் கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு தற்பொழுது அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தை வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் நடித்த நடிகர்கள் தமிழக முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் போர் தொழில் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் சந்திப்பதற்காக நடிகர் அசோக் செல்வன் சரத்குமார் மற்றும் படத்தின் இயக்குனர் விகனேஷ் ராஜா ஆகியோர் வருகை தந்து ரசிகர்களோடு கலந்துரையாடினார்கள்.

பின்னர் நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: இயக்குனர் விக்னேஷ் ராஜா முதன் முறையாக படம் இயக்கி பிரம்மாண்டமான முறையில் படத்தை இயக்கியுள்ளார், ரசிகர்கள் இந்த படத்தை  கொண்டாடி வருகின்றனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இதுவரையிலும் தெரிவிக்கவில்லை என்பது மகிழ்ச்சியாக உள்ளதுடன், மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும், திருச்சியில் எடுக்கப்பட்ட படம் என்பதால் மிக பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது அதேபோன்று அடங்காதே படமும் திருச்சியில் எடுத்துள்ளேன், மூன்று மாதத்தில் வெளியாக உள்ள அப்பிடமும் அதுவும் வெற்றியாக அமையும் என நம்புவதாக தெரிவித்தார். சிறந்த படங்கள் வெளியாகும் போது அது 45 நாட்கள் தொடர்ச்சியாக தியேட்டரில் ஓட ஏதுவாக தயாரிப்பாளர் கவுன்சிலில் இது குறித்து பேச உள்ளதாகவும், இது போன்ற வெற்றி படங்களை எடுத்து மக்களை வரவைப்பதற்கு சிரத்தையோடு இருப்பார்கள் எனக் கூறியுள்ளார். 

சென்னை, நீலாங்கரையில் மாநில அளவில் 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களை கொளரவிக்கும் நிகழ்வில் நடிகர் விஜய் கலந்துகொண்டு அவர்களுக்கு தேவையான சிறிய உதவிகளை செய்தார். இது குறித்து சரத்குமார் கூறுகையில், கல்விக்கு பல நடிகர்கள் உதவி புரிவது போல நடிகர் விஜய்யும் உதவி புரிந்தது சந்தோஷம்தான், யாரும் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான், இருக்கிற எல்லாருமே அரசியலுக்கு வரணும்னுதான் நான் விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.