திருச்சியில் புகழ்பெற்ற நாடக நடிகர் தாவர்ஹால் விஸ்வத்தின் மகன் வி.காளிதாஸ். நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் காளிதாஸ். 1980-ம் ஆண்டுகளில் பல்வேறு படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். சமீபத்தில் வெளியான கே.ஜி.எஃப் படத்திலும் கூட குரல் கொடுத்திருந்தார் காளிதாஸ்.
படங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்து தமிழில் வெளியாகும் நாடகங்களுக்கு தமிழில் டப்பிங் கொடுத்தும் வந்திருக்கிறார். இவர் செய்தி வாசிப்பாளரான சோபனா ரவி மற்றும் நடிகை சொர்ணமால்யாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக ரத்த தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலமானார். இவருக்கு விஜய், பார்கவி என்ற இரு மக்கள் உள்ளனர். காளிதாசின் இறுதிச்சடங்கு சென்னை போரூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.