மாவட்டம்

தாயை கவனிக்காத மகன்; சிறையில் அடைத்த கோட்டாட்சியர்; விடுதலை செய்த மாவட்ட ஆட்சியர்!

Malaimurasu Seithigal TV

திருச்செந்தூர் அருகே பெற்ற தாயை பராமரிக்க தவறிய மகனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை மேல் முறையீட்டில் மாதம் ரூ.1000 ஆயிரம் வழங்கி உத்தரவிட்டு சிறைத் தண்டனையில் இருந்து விடுவிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா வாழவள்ளான் பகுதியைச் சேர்ந்த மாலையம்மாள்(79) என்பவருக்கு முத்துக்குமார்(41), பாலசுப்பிரமணியன், மணிகண்டன் ஆகிய மூன்று மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் முத்துக்குமார் பெற்ற தாய் மாலையம்மாளை பராமரிக்க தவறியதாக, மாலையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமார் மாதம்தோறும் ரூ.5ஆயிரம் கொடுக்க வேண்டும் என திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்.  ஆனால் முத்துக்குமார் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் கொடுக்காததால் மாலையம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமாருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். 

இதனையடுத்து முத்துக்குமார் ஆகஸ்ட் 23ஆம் தேதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் முத்துக்குமாரின் மனைவி சாந்தி(39) மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்திருந்தார்.  அந்த மேல்முறையீட்டில் கணவர் முத்துக்குமார் கூலி வேலை செய்து வந்துள்ளார். வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், மூன்று குழந்தைகள் இருப்பதால் கணவரின் வருமானம் குடும்பத்தை வழிநடத்த போதுமானதாக இல்லை. மேலும் மாலை அம்மாளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் மட்டும்தான் வழங்க முடியும். குடும்பம் நலம் கருதி சிறை தண்டனையில் இருந்து முத்துக்குமாரை விடுவிக்கும்படி முறையிட்டு இருந்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் முத்துக்குமார் தாய் மாலையம்மாளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கிட உத்தரவிட்டு, சிறை தண்டனையில் இருந்து முத்துக்குமாரை விடுவிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து முத்துக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.