தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே 22 அன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு பல்வேறு போராட்டக் குழுவினர் மீது காவல் துறையினரால் பல்வேறு பொய்வழக்குகள் பதியப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியை சேர்ந்த அக்ரி பரமசிவன் என்பவர் மீது புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை அவர்களால் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
சம்மன்கள் அளித்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் - பிடிவாரண்ட்
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கானது தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையானது கடந்த 2020 முதல் நடைப்பெற்று வரும் நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த திருமலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக பலமுறை சம்மன்கள் அளித்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் (திருநெல்வேலி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) திருமலை) எதிராக தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஆர்.செல்வகுமார் கடந்த மார்ச் மாதம் பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கோஷங்கள்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் திருமலை மீது ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை, சிபிஐ வழக்கு விசாரணை, மனித உரிமைகள் வழக்கு விசாரணை, தாழ்த்தப்பட்டோர் ஆணைய வழக்கு விசாரணை மற்றும் தூத்துக்குடி நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை தற்போது துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு குறித்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
அக்டோபர் மாதம் திருமலையை சஸ்பெண்ட்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் திருமலையை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது