மாவட்டம்

ஒரே வீட்டில் பிடிப்பட்ட ஆறு கொம்பேறி மூக்கன் பாம்புகள்...!!

Malaimurasu Seithigal TV

சின்னாளப்பட்டி அருகே ஒரே வீட்டில் ஆறு கொம்பேறி மூக்கன் பாம்புகள் பிடிபட்டன. ஆத்தூர் தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி பாம்புகளை பிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகில் உள்ள அம்பாத்துறை ஊராட்சியில் அமைந்துள்ள காமாட்சி நகர் பகுதியில் வசிப்பவர் நம்பிராஜன்.  இவர் ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர்.  நம்பிராஜன் அவருடைய மனைவி, மகன், மகள், மருமகள், பேத்தி என  ஐந்து பேருடன் ஓடுகள் வேயப்பட்ட வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் முகப்பு ஓட்டில் பாம்பு ஒன்று தெரிவதை கண்ட நம்பிராஜன் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

இதனையடுத்து நிலைய அலுவலர் புனித் ராஜ் மற்றும் முதன்மை தீயணைப்பு வீரர்களான அழகேசன், சோலைராஜ் மற்றும் பரத் ஆகியோர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து முகப்பு ஓடுகளுக்குள் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர்.  பின்னர் அருகிலேயே மற்றொரு பாம்பும் இருந்தது தெரிய வந்தது.  

அதனை தொடர்ந்து வரிசையாக வீடு முழுவதும் ஓடுகளுடைய  விரிசல்களில் ஆங்காங்கே பாம்புகள் தென்பட்டன. அதனை தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரமாக போராடி ஆறு கொம்பேறி மூக்கன் பாம்புகளையும் பிடித்தனர்.  இதனையடுத்து அந்த வீட்டில் இருந்தவர்களும், அப்பகுதி பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.