மாவட்டம்

நியாய விலை கடைகளில் விநியோகிக்கப்படும் பிளாஸ்டிக் அரிசி...!!

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடையில் விநியோகிக்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.  மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் ஆகிய 6 தாலுகாக்களில் 764 ரேஷன் கடைகள் உள்ளன.  இக்கடைகள் மூலம் சுமார் 5 லட்சத்து 68 ஆயிரத்து 830 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசிகளில் பிளாஸ்டிக் அரிசி கலந்து இருப்பதாக ஒரு சிலர் தகவல்களை பரப்பி வருகின்றனர்.  குறிப்பாக இரணியல் கோணம் மகளிர் நியாய விளை கடையில் ரேஷன் அரிசி கலந்து இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதனால் அங்கு ரேஷன் கடை ஊழியருக்கும் குடும்ப அட்டை தாரர்க்கும் தகராறு ஏற்பட்டது.  அதற்கு அடுத்தபடியாக தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  ரேஷன் கடைகளில் வழங்கிய அரிசியை தண்ணீர் ஊறப்போடும் போது தனிதனியாக அரிசிகள் மிதக்கிறது எனவும் ஒரு வேளை அது பிளாஸ்டிக் அரிசியாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்ப்டடுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வாயிலாக, ரத்தசோகை நோயை கட்டுப்படுத்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் அரிசிகள் பிளாஸ்டிக் போன்று காட்சி அளிப்பதாகவும் அதனால் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.  ஆனாலும் பொதுமக்கள் நம்பகத்தன்மை இன்றி தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு வருகின்றனர்.  எனவே மாவட்ட நிர்வாகம் ரேஷன் கடையிலும், ரேஷன் குடோன்களிலும் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளானர்.