மாவட்டம்

கோடை சீசனுக்கு ரெடியாகி வரும் நீலகிரி....!!

Malaimurasu Seithigal TV

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் இரு வாரங்களில் துவங்க உள்ளதால் பைக்காரா படகு இல்லத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வரும் நிலையில், படகு இல்ல நிர்வாகம் படகுகளுக்கு வர்ணம் பூசி, பராமரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

அவ்வாறு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பைக்காரா அணையில் ஸ்பீடு படகில் சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டுவதால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக படகுகளுக்கு வர்ணம் பூசி, பராமரிக்கும் பணிகளில் படகு இல்ல நிர்வாக ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் தற்போது மழை இல்லாமல் வறட்சி நிலவி வருவதால் பைக்காரா அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.