திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் முதல் கட்ட அகழாய்வில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈமப் பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வந்தவாசியிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கீழ்நமண்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரலாற்று ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், இந்த கிராமத்தின் வடமேற்கு பகுதியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால இடுகாடு இருப்பதும், இதில் 3 மீட்டர் விட்டம் முதல் 5 மீட்டர் விட்டம் வரையிலான 200-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த கல்வட்டங்களில் பெருங்கற்கால மனிதர்களின் ஈமப் பேழைகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், இந்தப் பகுதியில் முறையான அகழாய்வு மேற்கொண்டால் பண்டைய தமிழர்களின் பண்பாட்டை உலகறிய செய்யலாம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் கீழ்நமண்டி பகுதியில் முதல் கட்ட அகழாய்வு செய்யும் பணிகள் கடந்த ஏப். 6-ஆம் தேதி தொடங்கியது. இதில் இதுவரை 11 கல்வட்டங்களை குழிதோண்டி அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த 11 கல்வட்டங்களிலும் தலா ஒன்று முதல் 3 ஈமப் பேழைகளும், சிவப்பு மற்றும் கருப்பு சிவப்பு பானைகளும் புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த ஈமப் பேழைகள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
சுடுமண்ணால் 12 கால்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஈமப் பேழைகள் தலா சுமார் மூன்றரை அடி நீளமும், 2 அடி அகலமும், ஒரு அடி உயரமும் கொண்டவையாக உள்ளன. இதில் சில ஈமப் பேழைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த ஈமப் பேழைகள் மற்றும் பானைகளை வெளியே எடுத்து ஆய்வு செய்த பின்னர்தான் இதில் வைக்கப்பட்டுள்ள பொருள்களின் விவரம் தெரியவரும்.
இந்த இடுகாட்டு பகுதியின் அருகில் பெருங்கற்கால மனிதர்களின் வாழ்விட பகுதி இருந்திருக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில், இடுகாட்டு பகுதி அருகில் 3 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் அந்த குழிகளிலிருந்து சிவப்பு மற்றும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதையடுத்து தொல்லியியல் துறையினர் அந்த பானை ஓடுகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த அகழாய்வின் போது கிடைக்கப் பெற்ற பொருட்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த பகுதியின்
பழந்தொன்மையை உலகறிய வாய்ப்புள்ளது.