கரூர் மாநகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள சுமார் 10 கடைகள் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வரி பாக்கி செலுத்தாமல் நிலுவைத்தொகை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு கடையும் தலா 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை வரி பாக்கி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் வருவாய் பிரிவு மற்றும் நகரமைப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர், வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
அப்போது கடைக்காரர்களில் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே பலமுறை வரிபாக்கி வைத்துள்ள கடைக்காரர்கள் நிலுவைத் தொகையை கட்ட வேண்டும் என்று மாநகராட்சி மூலமாக நோட்டீஸ் விடப்பட்டது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி பாக்கி செலுத்தாமல் கடைக்காரர்கள் இழுத்தடித்ததன் காரணமாகவே இன்று சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.