மாவட்டம்

4 முறை தோல்வி...விடாமுயற்சியில் சாதித்த இளைஞர்!!

Malaimurasu Seithigal TV

தந்தையின் வேலை பளுவைக் குறைக்க, நவீன செங்கல் அறுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார் .

செங்கல் சூளையில் வேலை செய்யும் தந்தையின் கஷ்டத்தை போக்க, மகன் செய்த மகத்தான காரியம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.  தந்தையின் கடின உழைப்பை உணர்ந்து, அவருக்கு உதவியாக செங்கல் அறுக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்அந்த இளைஞர். 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி வடக்கு தெருவை சார்ந்தவர் வினோத்.  25 வயதான இவர், 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.  வினோத்தின் தந்தை சந்திரசேகர், காட்டுச்சேரியில் சிறிய அளவிலான செங்கல் சூளை வைத்து, செங்கல் அறுக்கும் வேலை செய்து வருகிறார்.  சில நேரங்களில் வினோத், தந்தைக்கு உதவியாக செங்கல் சூளைக்கு சென்று கல் அறுத்துக் கொடுப்பது வழக்கம். 

அப்போது, தந்தை படும் கஷ்டத்தை உணர்ந்த வினோத், கல் அறுக்கும் இயந்திரத்தை வடிவமைக்க திட்டமிட்டு, அதற்கு தேவையான பொருட்களை வாங்கி,  இணையதளம் மூலம் கல் அறுக்கும் இயந்திரத்தை வடிவமைத்தார். 
முதல் முயற்சி தோல்வியில் முடிய, துவண்டு போகாமல் மீண்டும் முயற்சித்தார்.  இப்படி 4 முறை தோல்வியில் முடிந்தாலும், ஒவ்வொரு முறையும், தான் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, விடா முயற்சியுடன், முயற்சித்தார். 

இறுதியாக தான் நினைத்த இயந்திரத்தை வடிவமைத்து வெற்றி கண்டுள்ளார் வினோத். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 500 கற்களை அறுத்து வந்த தந்தை தற்போது, 2 ஆயிரம் கற்களை அறுத்து வருகிறார்.  இதனால் தந்தை சந்திரசேகர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இணையதளம் மூலம் சூது விளையாடி உயிரை மாய்த்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு மத்தியில், இணையத்தின் மூலம் நல்ல விஷயங்களையும் செய்ய முடியும் என்பதற்கு வினோத் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.