ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவரின் பணியிட மாற்றத்தை கைவிட கோரி நோயாளிகள் மனு அளித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே செயல்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் நாள்தோறும் ஈரோடு, நாமக்கல் உட்பட சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு கோபி பகுதியை சேர்ந்த மருத்துவர் 'ஐய்யப்பன்' என்பவர் நோயாளிகளிடம் கனிவாக பேசி சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில் நிர்வாக காரணமாக மருத்துவர் ஐய்யப்பனை பணியிடம் மாற்றுவதாக நோயாளிகள் மத்தியில் தகவல் பரவியது.
இதனையறிந்ததும், மருத்துவரை பணியிடம் மாற்றக் கூடாது எனக்கோரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், மருத்துவர் ஐய்யப்பன் புற்று நோயாளிகளிடம் சிறந்த அணுகுமுறையுடன் சிகிச்சை அளிப்பதோடு, புற்றுநோய் விரைவில் குணப்படுத்துதல் தொடர்பான மருத்துவ பணிகளை சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவரை பணியிடம் மாற்றும் முடிவை மருத்துவமனை நிர்வாகம் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி ஆசிரியர்,தலைமை ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் செயலுக்கு மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புற்றுநோய் மருத்துவர் பணியிடம் மாற்றம் செய்யக்கூடாது என புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் உறவினராகள் மனு அளித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | வீட்டை விட்டு விரட்டிய மருமகள்: தர்ணாவில் ஈடுபட்ட மாமியார்...!