2027-ம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களில் கிராமப்புற சமூக மனநல ஆரோக்கிய திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் நேரடி சேவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகையும், லைவ் லவ் லாஃப் அமைப்பின் நிறுவனருமான தீபிகா படுகோன் கூறியுள்ளார்.
கடந்த 2014 ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றார் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன். அதிலிருந்து விடுபட்ட பின் அவர், இது போன்று மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயல்வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2015 ஆம் ஆண்டு லைவ் லவ் லாஃப் என்ற அமைப்பினை பெங்களூருவில் 2017-லும், 2019 முதல் ஒடிசாவிலும் தொடங்கினார்.
இதனையடுத்து தீபிகா படுகோன், இந்தியாவின் கிராமப்புறங்களில் சிறந்த மன நல ஆரோக்கியத்தின் அவசரத் தேவைகளுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் இந்த அமைப்பை விரிவுபடுத்த தீர்மானித்தார். இதனையடுத்து கேர் அஸ் என்ற துணை தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தியதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் ஈக்காட்டில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற வசந்தம் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்தின் மூலம் மன நல திட்டம் என்ற திட்டத்தை தமிழகத்திலேயே முதலில் தொடங்க 6 மாதத்திற்கு முன்பு, செயல்படுத்த அனுமதித்ததாக கூறப்படுகிறது.
அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதுடன், அவர்களுக்கு பாதுகாவலர்களாக இருப்பவர்களையும் கண்டறிந்து அவர்களது தேவைகளை அறிந்து, அதனை லைவ் லவ் லாஃப் என்ற அமைப்பின் மூலம் அதனை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே இதன் நோக்கமாகும். கடந்த 6 மாதத்திற்கு முன்பு களப்பணியாற்ற தொடங்கியதையடுத்து நேற்று முன்தினம் திருவள்ளூர் அடுத்த ஈக்காட்டிற்கு லைவ் லவ் லாஃப் அமைப்பின் நிறுவனர் தீபிகா படுகோன் நேரில் வருகை தந்து அங்கன்வாடி ஊழியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மனநலம் பாதித்தவர்களின் பாதுகாவலர்களை குழுக்களாக சந்தித்து பேசினார். மன நலம் பாதித்தவர்களை எவ்வாறு கண்டறிகிறீர்கள் என்றும், அவர்களது தேவைகளை எப்படி தெரிந்து கொண்டு அதற்காக செயலாற்றுகிறீர்கள் எனவும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து தீபிகா படுகோன் பேசும் போது, இந்த திட்டத்தை தொடங்கியது முதல் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையையும், அவர்களைப் பராமரிப்பவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் துளி அளவும் தவறாது செயல்பட்டு வருவதாகவும், இந்த மன நல திட்டத்தை தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது 6296 பயனாளிகள் இந்த அமைப்பு மூலம் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், வருகிற 2027-ம் ஆண்டிற்குள் 40 ஆயிரம் நேரடி பயனாளிகளை அடையும் இலக்கை எட்ட முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.