பொன்னேரியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடந்த 2018ஆம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட்ட இத்திட்ட பணிகள் 2020 ஆண்டு இறுதியில் நிறைவடைய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் நிர்ணயிக்கப்பட்ட நாளைவிட இரண்டரை ஆண்டுகள் அதிகமாகியும் இதுவரை 60 சதவீத பணிகள்தான் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஹரிஹரன் கடைவீதி, மீஞ்சூர் செல்லும் சாலை, தச்சூர் சாலை, ஏலியம்பேடு செல்லும் சாலை என நகரின் முக்கிய சாலைகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக ஆங்காங்கு பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொன்னேரியில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவது அன்றாட நிகழ்வாகி வருகிறது.
குறிப்பாக அவசர ஊர்திகள், தீயணைப்பு வாகனங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ மாணவியர், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் தினமும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே மிகவும் மந்தமாக நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பழைய பேருந்து நிலைய பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிக்க: பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதம்...!!