தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை
வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் மற்றும் கழிவு நீர் பாதையினுள் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை. செப்டிக் தொட்டிகளை சுத்தப்படுத்துவதற்கு மற்றும் அடைப்பு அகற்றுவதற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிநீர் அகற்று வாரியத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்.
சென்னை மாநராட்சி எச்சரிக்கை
வீடுகளில் உள்ள கழிவுநீர் பாதை மற்றும் செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை நியமிக்க அரசு தடை விதித்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சி வழிகாட்டு நெறிமுறைகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் மற்றும் கழிவு நீர் பாதையினுள் இறங்கி சுத்தம் செய்ய எந்த ஒரு தனி நபரையும் நியமிப்பது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றம். ஒரு கட்டிடத்தில் செப்டிக் டேங்க் அல்லது கழிவு நீர் பாதை சுத்தம் செய்யும் போது சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ வீட்டு உரிமையாளர் அல்லது கட்டிட உரிமையாளர் அல்லது வாடகைக்கு குடியிருப்போர் அல்லது நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரரே பொறுப்பாவார்கள் என எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது ஏன்? சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் வந்த கருத்துக்கள் என்ன?
வாரிசுதாரர்களுக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு
மேலும் செப்டிக் டேங்க் அல்லது கழிவுநீர் பாதை சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் இறந்தவரின் குடும்பத்தைச் சார்ந்த வாரிசுதாரர்களுக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும் என்றும் கழிவுநீர் பாதை மற்றும் செப்டிக் தொட்டிகள் இயந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
புகார் எண் அறிவிப்பு
மனிதர்கள் மூலம் கழிவுநீர் பாதை அடைப்பு அகற்றுவது மற்றும் செப்டிக் தொட்டிகள் சுத்தம் செய்வதை கண்டறிந்தால் உடனடியாக 14420 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். செப்டிக் தொட்டிகளை சுத்தப்படுத்துவதற்கு மற்றும் அடைப்பு அகற்றுவதற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிநீர் அகற்று வாரியத்தை 044-45674567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.