மாவட்டம்

சாக்குப்பையில் பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை....!!

Malaimurasu Seithigal TV

நெல்லை மாவட்ட சிப்காட் நிலம் எடுப்பு தாசில்தாராக பணியாற்றும் சந்திரன் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் நூற்றுக்கு மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் சாக்குப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது .

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் செயல்படும் சிப்காட்டில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் சந்திரன். பாளையங்கோட்டை அடுத்த கேடிசி நகரில் உள்ள சந்திரனின் வீடு மற்றும் அதே பகுதியில் உள்ள அவரது மகள் வீடு மற்றும் தூத்துக்குடியில் மகன் வீடு என நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை 7 மணி முதல் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் சந்திரனின் வீட்டில் சாக்குப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் 28 லட்சத்தி 91 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதற்காக வங்கியில் இருந்து பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான பணம் எண்ணப்பட்டது.  30 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பணமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  12 மணி நேரத்திற்கும் மேலாக காவல் ஆய்வாளர் ராபின் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.