மாவட்டம்

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிழக்கே சீறிப்பாய்ந்த இரயில்..... நிறைவேறிய தேனி மக்களின் நீண்ட நாள் ஆசை!

Malaimurasu Seithigal TV

இந்தியாவிலேயே ரயில்கள் ஓடாத மாவட்டம் இருந்தது என்றால், அது தமிழ்நாட்டைசேர்ந்த தேனி மாவட்டம் தான். ஆம்,  மதுரை - போடிநாயக்கனூர் இடையிலான ரயில் சேவை சுமார் 50 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த போதிலும், அகல ரயில்பாதை திட்டத்திற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மதுரை - போடி இடையேயான  ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 

அதுவரை ரயில் போக்குவரத்தை நம்பி வாழ்வாதாரத்தை நகர்த்தி வந்த மக்களுக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்ட செய்தி பேரிடியானது. அந்த நாள் தொடங்கி தற்போது வரை விரைவில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே தேனி மாவட்ட மக்களின் ஒருமித்த கோரிக்கையாக இருந்து வந்தது.

மேலும், அகல ரயில் பாதை திட்டப்பணிகளுக்காக 128 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும், பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெரிதும் பாதிப்படைந்தனர். மேலும், விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறையின் மிகப்பெரிய மையமாகவும் தேனி திகழ்வதால்,  விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை குறைந்த போக்குவரத்து செலவில் ரயில்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு சென்றதும் முடிவுக்கு வந்தது. 

இந்த நிலையில் தான் மதுரை-போடிநாயக்கனூர் இடையேயான அகல ரயில் பாதை திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவது தொடர்பாக அத் தொகுதியின் எம்.பி.யான ரவீந்தரநாத்,  மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார். அதனை தொடர்ந்து  அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துரித கதியில் நடைபெற்றது.

இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள ஒரு செய்தி, தேனி மாவட்ட மக்களை திக்குமுக்காட செய்துள்ளது. ஆம் 12 ஆண்டுகளுக்கு பிறகு, மதுரை - போடிநாயக்கனூர் இடையேயான ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  இவ் வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. அதேப்போல போடிநாயக்கனூர் - சென்னை இடையேயான பயணிகள் இரயில் சேவையும் தொடங்கப்படவுள்ளது என்பது கூடுதல் தகவல்.

இவ்வாறிருக்க,  போடிநாயக்கனூர் மற்றும் மதுரை இடையேயான பயணிகள் ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எம் பி ரவீந்திரநாத் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கடந்த 2011-ஆம் ஆண்டு போடி-மதுரை இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு, 128 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வந்த அகல ரயில் பாதை பணிகள், பணிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு நிறைவு பெற்று.

எனவே, மீண்டும் அந்த மார்க்கத்திற்கான ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதுரை வரை இயக்கப்படுகிற விரைவு ரயில், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக போடியநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேனி, பெரியகுளம், கம்பம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். கொரோனா காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கட்சுக்கூடா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்கள் கொடைரோடு ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்று ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து, 12 ஆண்டுகள் கழித்து மதுரை - போடி இடையேயான இரயில் சேவை துவக்கப்பட்டுள்ளதால், வத்தலகுண்டு, தேனி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், லோயர் கேம்ப் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.