க்ரைம்

செல்லூர் ராஜூ பெயரில் அதிமுக கவுன்சிலர் கோடிக்கணக்கில் மோசடி

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jeeva Bharathi

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகாவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சரவணன். இவர், கடந்த 2020 ஆண்டு முகநூல் மூலம் மதுரையைச் சேர்ந்த சங்கரி என்பவருடன் அறிமுகம் ஆகி உள்ளார். சங்கரி தனக்கு அரசியல் பிரமுகர்களிடம் நன்கு பழக்கம் இருப்பதாகவும், குறிப்பாக செல்லூர் ராஜூ, தனக்கு எந்த வேலையும் செய்து கொடுப்பார் எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய சரவணன், திண்டிவனத்தில் மணல் குவாரி அமைப்பதற்கு செல்லூர் ராஜு உதவ வேண்டுமென பல தவணையாக மதுரை அதிமுக கவுன்சிலர் மாயத்தேவன், சங்கரி மற்றும் பிருந்தா ஆகியோருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார்.

ஒருகட்டத்தில் குவாரி கிடைக்காத நிலையில், பணத்தை திரும்பி பெறுவதற்காக பிருந்தா என்பவரை தொடர்புகொண்டபோது எந்த பதிலும் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில், பிருந்தாவை மர்ம கும்பல் கொலை செய்துவிட்டதாகவும், அதற்கு சரவணன் தான் காரணம் என போலீஸ் நினைப்பதாகவும் சங்கரி மற்றும் அதிமுக கவுன்சிலர் மாயத்தேவன் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், தன்னையும், தமது குடும்பத்தையும் காப்பற்ற வேண்டுமென 6 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டவே, மனஉளைச்சலுக்கு ஆளான சரவணன் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனடிப்படையில் வழக்குப்பதிந்த போலீசார், அதிமுக கவுன்சிலர் மாயத்தேவன், சங்கரி உட்பட ஐந்து பேர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.