க்ரைம்

இப்படியெல்லாம் திருடுவார்களா... நூதன திருடனால் அதிர்ச்சி...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேர்க்கடலை கொள்முதல் செய்ய வந்த ஒருவர், நவீன முறையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி : அஞ்செட்டி தாலுகாவில் அதிகளவில் மலை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் மேட்டு நில விவசாயநிலங்களில் பெரும்பாலும் வேர்க்கடலை மற்றும் ராகி ஆகியவையே பயிரிடப்படுவது வழக்கமாகும்.  இங்கு பயிரிடப்படும் வேர்க்கடலைகளை கொள்முதல் செய்வதற்கு விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை உள்ளிட்ட வெளியூர் வியாபாரிகள் வருவது வாடிக்கை.

வேர்க்கடலை வாங்கும் வெளியூர் வியாபாரிகள்:

கடந்த ஒரு மாத காலமாக வெளியூர் வியாபாரிகள் இந்த அஞ்செட்டி தாலுகாவில் முகாமிட்டு வேர்க்கடலைகளை வாங்கிச் சென்று வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தேன்கனிக்கோட்டையை அடுத்த குமார்த்தனப் பள்ளி கிராமத்திற்கு வந்து கிலோக் கணக்கில் வேர்க்கடலை மூட்டைகளை வாங்குவதற்கு வந்திருந்தார். 

இடுப்பில் வந்த பீப் சத்தம்:

மூட்டைகளை எடைபோடும்போதெல்லாம் கடலை ஏற்றுமதி செய்பவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியானது. ஏனென்றால் ஒவ்வொரு மூட்டைக்கும் சரியாக 10 கிலோ எடை குறைவானதால் அந்த ஊர் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் மூட்டைகளை எடைபோடும் போதெல்லாம் ஆறுமுகம் இடுப்பில் கை வைத்துக் கொண்டு சிறிய கருவியை அழுத்தியதையும், அப்போது எடை மெஷினில் இருந்து பீப் சத்தம் வந்ததையும், அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கண்டு கொண்டார்.

தர்ம அடி வாங்கிய திருடன்:

இதையடுத்து எடைபோட்ட ஆறுமுகத்தை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து விசாரித்தனர். அப்போது அடிதாங்காத ஆறுமுகம், தான் செய்த திருட்டு வேலையை கக்கத் தொடங்கினார்.  திருவண்ணாமலையைச் சேர்ந்த அலாட் ஆறுமுகம், உள்ளூர்க் காரர் ஒருவரின் உதவியுடன் ஊருக்குள் இப்படியான திருட்டு வேலைகளை செய்து வந்திருக்கிறார். எடைபோடும் எந்திரத்திற்கு அடியில் ஒன்றரை சதுர அடி கொண்ட சென்சார் எந்திரத்தைப் பொருத்தி விட்டு, அதனை ரிமோட் மூலம் இயக்கி வந்திருக்கிறார்.

ரிமோட் மூலம் திருடிய நூதன திருடன்:

50 கிலோ எடையுள்ள மூட்டையை எந்திரத்தின் மீது வைத்து விட்டு, ரிமோட்டை இயக்கி விடுவார் ஆறுமுகம். இப்படி ஒவ்வொரு மூட்டைக்கும் 10 கிலோ வரை குறைத்து எடைபோட்டு ஒரு மூட்டைக்கு 700 ரூபாய் வரை அடித்திருக்கிறார்.  கிட்டத்தட்ட 180 மூட்டையை எடைபோட்டு மொத்தம் 1 லட்ச ரூபாய்க்கு மேல் ஆட்டையைப் போட்டிருக்கிறார்.  எடையில் அடித்தவரை பொதுமக்கள் அடித்து ஆறப்போட்டனர்.

500 மூட்டைகளை திருடிய திருடன்:

பொதுமக்களின் உதவியுடன் போலீசில் பிடிபட்ட ஆறுமுகம், இதுவரை 500-க்கும் மேற்பட்ட மூட்டைகளைப் பெற்றுக் கொண்டு திருட்டு வேலையில் ஈடுபட்டதாக குற்றத்தை ஒப்புக் கொண்டார்.  ஏற்கெனவே விவசாயத்தில் லாபம் இல்லையென்றாலும், நாட்டு மக்களின் பசியை விவசாயிகளின் வாழ்க்கையில் அரசாங்கம் ஒரு பக்கம் அடிக்க, மறுபுறும் இதுபோன்ற ஈனப்பிறவிகள் அடிக்க, விவசாயிகளின் வேதனை தீர்வது எப்போது?