க்ரைம்

பள்ளியில் வழங்கப்படும் காலை உணவில் தீண்டாமை... கலெக்டர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

Malaimurasu Seithigal TV

கரூர் தொடக்கப் பள்ளியில் பட்டியலின பெண் சமைத்து தரும் உணவுகளை தங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என கலெக்டரிடமே தெரிவித்துள்ளார் ஒருவர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

பள்ளிக்கு வரும் பிள்ளைகள் பசியோடு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு சீர்பட வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் சாதிய பாகுபாடு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன் செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்திற்காக சுமதி என்ற பெண் பணியமர்த்தப்பட்டார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுமதி பள்ளி மாணவர்களுக்கு சமையல் செய்வதை கேள்விப்பட்ட பொதுமக்களில் சிலர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட அனுமதிக்க முடியாது என மறுத்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த சுமதி நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், பள்ளிக்கல்வி துறை அலுவலர்களுடன் நேரில் சென்று சுமதியை சமைக்க செய்து அந்த உணவு சாப்பிட்டு மகிழ்ந்தார். 

இந்த நிகழ்வின்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் பட்டியலின பெண் சமைத்து கொடுப்பதை சாப்பிட முடியாது என கலெக்டரிடமே நேரடியாக கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த கலெக்டர் இனிமேல் இதுபோன்ற தீண்டாமை பாகுபாடுகள் பார்க்கக்கூடாது என்றும் அப்படி பார்த்தால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.