தென்காசி : மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான கடையத்தை சேர்ந்த வைகுண்டமணி. இவர் மசாலா வியாபாரம் செய்து வருகிறார். இவர், இன்று காலை வழக்கம் போல் கடையம் அருகேயுள்ள சிவசைலம் கிராமத்தில் வியாபாரம் முடித்த பின்னர் அங்கிருந்து பெத்தான்பிள்ளை குடியிருப்பு என்ற கிராமத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது சாலையின் குறுக்கே திடீரென உலா வந்த கரடி அவரது இருசக்கர வாகனத்தை மறித்து கீழே தள்ளியதுடன் அவரை கடித்து குதறியது. தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | ஹெட்போனுக்கு சண்டை... இளைஞரின் மண்டை உடைந்தது...
அவரை காப்பாற்ற முயன்ற போது பெத்தான்பிள்ளை குடியிருப்பத்தை சேர்ந்த நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோரையும் கரடி கடித்து குதறியது. இதில் 3 பேருக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பட்டப்பகலில் சாலையில் உலா வந்து பொதுமக்களை கடித்து குதறிய கரடியால் இப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | மது போதையில் மண்டையை உடைத்த ஆசாமிகளால் பதற்றம்...