கவர்ச்சி விளம்பரங்களை மட்டுமே தருகிறார்கள் ஆனால் மக்களை கவனிக்கவில்லை, பணம் மட்டுமே அவர்களின் நோக்கமாக உள்ளது என்று சக்தி டால் ரைஸ் பவுடரை வாங்கி சாப்பிட்டு பாதிக்கப்பட்ட நபர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
சக்தி டால் பவுடர்:
சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த காமேஷ் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரட்டூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டான ஹை ஃப்ரெஷ் - ஷில் ரூபாய் 60 கொடுத்து சக்தி டால் ரைஸ் பவுடரை வாங்கியதாகவும், அதை வீட்டிற்கு எடுத்து சென்று சாப்பிட்ட போது வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் பின்பு அந்த பாக்கெட்டில் பூச்சிகள் இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் கூறினார்.
ஆய்விற்கு:
அதனைத் தொடர்ந்து அதே கடைக்குச் சென்று வேறு ஒரு நபர்கள் வைத்து ஐந்து பாக்கெட்டுகள் வாங்கி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், நீதிமன்றம் கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்வுக்கு பாக்கெட்டுகளை ஆய்வுக்கு அனுப்பியதாகவும், அதை இன்ஸ்டிடியூட் பாதுகாப்பாற்ற உணவு என்று அந்த பாக்கெட்டுகளை சொல்லிவிட்டதாகவும் தெரிவித்தார்.
தரமற்றவை:
மேலும் கொரோனா காலம் என்பதால் வழக்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தற்போது தான் தீர்ப்பு வந்துள்ளது என்று கூறிய அவர் பிரபல உணவு பொருள் தயாரிப்பு நிறுவனமான சக்தி மசாலா கம்பெனியின் உற்பத்தி பொருட்கள் தரமற்றவை என்றும், மேலும் அந்நிறுவனத்திற்கு ரூ.25,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
நாங்கள் 5 லட்சம் நஷ்ட ஈடு கேட்டுள்ளதாகவும் எங்களுக்கு இந்த வழக்கு தொடர உள்நோக்கம் எதுவும் இல்லை எனக் கூறிய வழக்கறிஞர், நாங்கள் பப்ளிசிட்டிக்காக இந்த வழக்கை தொடரவில்லை என்றும் கூறினார்.
வழக்கு என்ன?:
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த பவுடரை வாங்கி சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், கவர்ச்சி விளம்பரங்களை மட்டுமே தருகிறார்கள் ஆனால் மக்களை கவனிக்கவில்லை என்றும் பணம் மட்டுமே அவர்களின் நோக்கமாக உள்ளதாக குற்றம் சாட்டிய அவர் அந்த பாக்கெட்டில் 420 பூச்சிகள் இருந்ததாகவும், அதுபோன்ற பாக்கெட்டுகளில் இருந்த பவுடரை கர்ப்பிணி பெண்கள் அல்லது வயதான பெண்கள் சாப்பிட்டால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்க கூடும் என்று கேள்வி எழுப்பியவர் இதுபோன்று வேறு யாருக்கும் நடக்க கூடாது என்பதால் மட்டுமே நாங்கள் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: கைவிடப்படும் மெட்ரோ திட்டங்கள்... காரணம் என்ன?!!