க்ரைம்

குட்கா பயன்படுத்தியவாறு கிரிக்கெட் விளையாடிய இளைஞர்... அள்ளிச் சென்ற திருச்சி போலீசார்..!

போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டு உற்சாகமாக கிரிக்கெட் விளையாடுவது போல வீடியோ வெளியிட்ட இளைஞரை திருச்சி போலீசார் அள்ளிச் சென்றனர். இதுகுறித்தான விரிவான தகவல்களை பார்க்கலாம்...

மாலை முரசு செய்தி குழு

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி வருவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். போதாக்குறைக்கு கொக்கைன் கடத்தல், போதை ஊசி, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்றவை குறித்த செய்திகள் இணையத்தில் உலவி வருகின்றன.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹான்ஸ் எனப்படும் போதைப் பொருளை பயன்படுத்தியவாறே கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டார்.

திருச்சி முசிறி அருகே உள்ள மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன். கல்லூரி மாணவரான இவர் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் சாலையின் நடுவே கிரிக்கெட் விளையாடியவர், ஹான்ஸ் போட்டு மென்றவாறே மட்டையை எடுத்த சுழற்றினார்.

அதாவது, பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்களில் கீரையை தின்று விட்டு எதிரியை எகிறி அடிக்கும் பாப்பாய் தொடர் போல, லட்டு தின்று விட்டு டாஸ்க்கை முடிக்கும் சோட்டா பீம் போல தன்னை நினைத்துக் கொண்டார் விக்னேஷ்வரன்.

ஹான்ஸை வாயில் போட்டவுடன் தனக்கு அதிக சக்தி வந்தது போலவும், சிக்ஸர் அடித்ததற்கு போதைப் பொருள் பயன்படுத்தியதே காரணம் என்பது போலவும் சித்தரித்திருந்தார்.

இந்த வீடியோ, இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து திருச்சி போலீஸ் எஸ்.பி. வருண்குமார், இளைஞர் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். பின்னர் விக்னேஷ்வரன் எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டார்.

மேலும் போதைப்பொருளை ஊக்குவிப்பது போன்ற வீடியோக்களை யாரும் எடுத்து சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

பாப்பாய், சோட்டா பீம் வரிசையில் தனக்கும் புகழ் கிடைக்கும் என நம்பிய சோட்டா பாய், காவல்துறையின் கண்டிப்புக்கு ஆளாகி கண்ணீர் விட்டதுதான் மிச்சம்.