ஓய்வு பெற்ற பெண் வங்கி அதிகாரியிடம் வாட்ஸ் அப்பில் உறவினர் போல் புகைப்படம் வைத்து 98 ஆயிரம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி. இவர் பொதுத்துறை வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்று குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது கணவரின் சகோதரர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும், அவரது புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபியாக வைத்த எண்ணில் இருந்து ராஜேஸ்வரிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்ததாகவும், அதில் தனது கணவரின் அண்ணன் மனைவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டதாகவும் உடனடியாக மருத்துவ செலவிற்கு பணம் தேவை எனக் கூறி பணம் அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய ராஜேஸ்வரி 98 ஆயிரம் ரூபாய் வரை ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்துள்ளார். இதனையடுத்து தனது அமெரிக்காவில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்து கேட்ட பொழுது அது போன்று யாரும் பணம் கேட்கவில்லை என தெரிய வந்ததை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து ஆன்லைன் மோசடியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஸ்வரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: 4 முறை தோல்வி...விடாமுயற்சியில் சாதித்த இளைஞர்!!