திருச்சி விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை வழக்கம்போல சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் எடுத்து வந்த பர்தா துணி வித்தியாசமாக இருந்தது. இதனையடுத்து முழுவதுமாக அந்த பர்தா துணியினை சோதனை செய்தனர்.
அந்த பர்தா துணியில் அலங்கார ஜரிகைக்கு பதிலாக தங்கத்தினை நூல் வடிவில் உருக்கி ஜரிகையாக வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, தங்கம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அயன் திரைப்படத்தில் வரும் காட்சிகளை போல திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நூதன முறையில் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாக உள்ள நிலையில், தற்போது இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா துணியில் அலங்கார ஜரிகை வேலைபாடுகளுடன் தங்கத்தை கடத்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடத்திவரப்பட்ட 251 கிராம் தங்கத்தின் சர்வதேச மதிப்பு சுமார், 13 லட்சம் என கூறப்படுகிறது.
தங்கத்தை கடத்தி வந்த விமான பயணியை கைது செய்து திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : பாலியல் வழக்குகள் தொடர்பாக அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்...!!!