க்ரைம்

கட்டிய தாலியின் ஈரம் காயல.. அதற்குள் அள்ளியது போலீஸ்..

காதலியை கரம்பிடித்த இளைஞர் திருட்டு வழக்கில் கைது...

malaimurasu.com

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை ஓம்சக்தி கோவில் நகரைச் சேர்ந்தவர் 22 வயதான வசந்த். உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த வசந்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீது காதல் அரும்பியது.

இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவரவே, பெண்ணின் பெற்றோர் தரப்பில் இருந்து முட்டுக்கட்டை விழுந்தது. ஆனால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தன் காதலனே உலகம் என எண்ணிய அப்பெண் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து காதலர்கள் இருவரும் ஜூன் 25-ம் தேதியன்று வடமதுரையில் உள்ள விநாயகர் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

தங்கள் திருமணத்துக்கு பெற்றோரிடம் இருந்து எதிர்ப்புகள் வரலாம் என முன்பே அறிந்தவர்கள் அவசர அவசரமாக வடமதுரை காவல்நிலையத்துக்கு விரைந்தனர்.

அப்போது வசந்த்தின் இருசக்கர வாகனத்தை பின்னால் ஒரு கார் துரத்தி வந்தது. இதனை கவனித்தவர்கள், பெண்ணின் உறவினர்களாக இருக்கக்கூடும் என அச்சத்தில் வேகமாக சென்றனர்.

ஆனால் மாரியம்மன் கோயில் வளைவு அருகே மடக்கிப் பிடித்த அவர்கள் வசந்தை காவல்நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

இதையடுத்து காரில் வந்தவர்கள், தாங்கள் காவல்துறையினர் என கூறி விட்டு, வசந்தை வேறொரு வழக்கிற்காக கைது செய்ய வந்திருப்பதாக கூறி அழைத்து சென்றனர். மேலும் வசந்தின் காதலியை ஆட்டோவில் ஏற்றி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சினிமா பாணியில் நடந்த இந்த காட்சியை அப்பகுதி மக்கள் புரியாமல் குழப்பத்துடன் நின்றனர். இது தொடர்பாக விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் விசாரித்தபோது வேறொரு தகவல் தெரியவந்தது.

அதாவது நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த வசந்த், கடந்த 10 நாட்களுக்கு முன்பு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றார். இதுகுறித்து பைக் உரிமையாளர் புகார் அளித்ததைத் தொடர்ந்து பைக் திருடனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் திருட்டு பைக்கில் உலா வந்த வசந்த், கல்லூரி மாணவியை காதலித்து அவசர அவசரமாக கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்துக்கு வருவதற்குள் திருட்டு வழக்கில் கைதானார் வசந்த்.

காதலனின் கையால் தாலியை ஏற்றுக் கொண்ட ஒரு சில நிமிடத்திலேயே கணவன் கைது செய்யப்பட்டதால், நிர்க்கதியாய் நின்ற அந்த பெண் பின்னர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.