க்ரைம்

விற்பனையாளரை தாக்கிய குடிமகன்...!!

Malaimurasu Seithigal TV

பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சிறுகன்பூரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் மது விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில் பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயதான கலாநிதி என்பவர் டாஸ்மாக் சென்று மதுஅருந்த சென்றுள்ளார். அப்போது விற்பனையாளர் நடராஜன், மதுபாட்டிலுக்கான தொகை 130 ரூபாயை வாங்கியதோடு, 15 ரூபாய் அதிகமாக கேட்டுள்ளார்.  கொடுத்த பணத்துக்கு அதிகமாக கேட்டதால் ஆத்திரமடைந்த கலாநிதி, மது விற்பனையாளரிடம் தகராறில் ஈடுபட்டார். 

இதையடுத்து ஆத்திரமடைந்த கலாநிதி, மதுபாட்டிலை எடுத்து நடராஜனின் தலையில் கடுமையாக அடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடினார். நெற்றியின் இடது பக்கத்தில் கண்ணாடி கிழித்ததில் அலறிய நடராஜனை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். 

டாஸ்மாக் பார்களில் வழங்கப்படும் மதுபாட்டிலுக்கு முதலில் 10 ரூபாய் வாங்குவதும், திரும்ப வந்து கொடுத்து விட்டால் அதே பத்து ரூபாயை மதுப்பிரியர்களுக்கு திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்பதும் எழுதப்படாத விதியாய் உள்ளது. 

ஆனால் பெரும்பாலும் அதிகமாக வசூலிக்கப்படும் பத்து ரூபாயானது, மதுப்பிரியர்களிடம் திரும்ப வழங்கப்படுவதே இல்லை என்பதே பலரது குற்றச்சாட்டாக உள்ளது. பத்து ரூபாய் எதற்காக பெறப்படுகிறது? அதன் பின்னணி காரணம் தெரியாததன் விளைவாக இங்கு ஒரு பரப்பரப்பான சம்பவம் ஏற்பட்டுள்ளது.