க்ரைம்

பட்டா மாற்றம் செய்ய, இடைத்தரகர்கள் வைத்து லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர்!

Malaimurasu Seithigal TV

ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர், இடைத்தரகர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது பூர்விக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலத்தை அண்மையில் அணுகியுள்ளார். 

அப்போது, பட்டா மாற்றம் செய்ய 10 ஆயிரம் தரவேண்டும் என துணை வட்டாட்சியர் சரவணன்  கூறியதாக கூறப்படுகிறது. இதற்காக ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்த சாம்பசிவம் மற்றும் வீரா  ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். 

இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ரசாயனம் தடவிய நோட்டுக்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர், சுரேஷிடம் வழங்கியுள்ளனர். இதனையடுத்து ரசாயனம் தடவிய நோட்டுக்களை இடைத்தரகர் சாம்பசிவத்திடம் சுரேஷ்  வழங்கியுள்ளார்.

சுரேஷிடம் இருந்து சாம்பசிவம் என்பவர்  பணத்தைப் பெற்று வீராவிடம் கொடுத்து வைத்திருக்க கூறியுள்ளார். இதையடுத்து  அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான காவல்துறையினர்  இடைத்தரகர்கள் சாம்பசிவம், வீரா இருவரையும் மடக்கி பிடித்தனர். 

விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தீவிர விசாரணையில் பணத்தை துணை வட்டாட்சியர் சரவணனுக்கு கொடுப்பதற்காக பெற்றுக்கொண்டதாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து  மூவரையும் கைது செய்து அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.