க்ரைம்

நிதி கொடுக்க மறுப்பு; ரகளையில் ஈடுபட்ட நா.த.க. நிர்வாகிகள்!

Tamil Selvi Selvakumar

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கட்சி நிதி கொடுக்க மறுத்த கடையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கண்ணாடி குடுவைகளை உடைத்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

கிருஷ்ணகிரி ஓரப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி கடைக்கு சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கருணாகரன், சக்திவேல் இருவரும், இப்பகுதியில் குளங்களை தூர்வார  கட்சிக்கு நிதி வேண்டும் என கடையில் பணம் கேட்டுள்ளனர். 

அதற்கு கடை உரிமையாளர் பணம் கொடுக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசியும், கடையில் இருந்த கண்ணாடி குடுவைகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி பணம் கொடுக்கவில்லை என்றால் இந்த பேக்கரி கடையை மொத்தமாக ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கி விடுவேன் என்றும், இனி இந்த பகுதியில் நீங்கள் பிழைப்பு நடத்த முடியாது என்றும் மிரட்டியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கந்திகுப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில், அங்கு வந்த காவல் ஆய்வாளர் சவிதா, காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் நேரில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார், நாதக கட்சி நிர்வாகிகள் இருவரையும் கைது செய்தனர்.

குளங்களை தூர்வார வேண்டும் என கட்சி நிதி கேட்டு பேக்கரி கடையில் உள்ள பொருட்களை சூரையாடிய சீமானின் தம்பிகளின் சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.