க்ரைம்

புழல் சிறை: மாரடைப்பால் உயிரிழந்த கைதி!

Malaimurasu Seithigal TV

புழல் மத்திய சிறையில் கைதி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராஜேஷ் ( வயது 50) என்பவர் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி நில அபகரிப்பு தொடர்பாக ஒரு வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் விசாரணைக் கைதியாக நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், இன்று ராஜேஷூக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலியால் துடித்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு புழல் சிறை நிர்வாத்தினர் கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த ராஜேஷ் கடந்த 18ஆம் தேதி புழல் சிறையில் நடந்த, குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு , சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜிடம் தனக்கு மருத்தவ உதவி தேவை என கோரிக்கை வைத்துள்ளார். அப்போது தனக்கு இதயம் சார்ந்த நோயுள்ளதால் தன்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

மேலும், புழல் சிறை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், நோய்வாய்ப்படும் கைதிகள் அவதிப்படுவதாக கைதிகளின் உறவினர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.  புழல் மத்திய சிறையில் போதுமான அளவு அடிப்படை மருத்துவ சிகிச்சைக் கூட அளிக்கப்படுவதில்லை என்ற  குற்றச்சாட்டுகளை  சில காலமாக கைதிகளை சந்திக்க வரும் அவர்களின் உறவினர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இதுத் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்பதிவில், "சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்காக பரிந்துரைக்க 50,000 ரூபாயும், உள்நோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்கு பரிந்துரைக்க ரூ. 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலும் அங்குள்ள மருத்துவக் குழுவினரால் கையூட்டாக வசூலிக்கப்படுகிறது" என்று குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.