செங்கல்பட்டு அருகே, திடீர் தாக்குதல் நடத்திய ரவுடிகளை என்கவுன்டர் செய்ததில், இரண்டு ரவுடிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காரணை-புதுச்சேரி அருங்கல் சாலையில், இன்று, அதிகாலை 03.30 மணியளவில், காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதி வேகமாக வந்த SKODA காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது மோதி நின்றுள்ளது.
அப்பொழுது, காவலர்கள் கார் அருகில் சென்ற போது, அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி, போலிசாரை தாக்க முற்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அருவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் லேசான காயங்களுடன் தப்பித்துள்ளார்.
இந்த சம்பவத்தில், சுதாரித்துக்கொண்ட காவல் ஆய்வாளர், அந்த கும்பலில் இருவரை சுட்டுள்ளார். மற்ற ரவுடிகள் ஆயுதங்களுடன் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, காயம்பட்ட இருவரை பற்றி விசாரித்ததில், அதில் ஒருவர் பெயர் வினோத் (எ) சோட்டா வினோத் என்பதும், மற்றொரு நபர் பெயர் ரமேஸ், என்பதும் தெரியவந்தது. இவர்கள் மேல், ஏற்கனவே பல பிரிவுகளில், பல வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், காயம்பட்ட உதவி ஆய்வாளர் திரு. சிவகுருநாதன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். மேலும், குண்டடி பட்ட ரவுடிகளை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க || மக்னா யானை வால்பாறை அருகே விடுவிப்பு... பீதியில் தொழிலாளர்கள்!!