ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகேயுள்ள கே.ஜி. வலசு பெருமாள் மலை பகுதியை சேர்ந்த கருப்பண்ணன், அவரது மல்லிகா, மகள் தீபா மற்றும் வேலையாள் குப்பம்மாள் ஆகியோர் நேற்று முன்தினம் அவர்களது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சென்ற இளைஞர் ஒருவர், தாம் கொரோனா பரிசோதனை செய்ய வந்ததாகக் கூறி ஒரு மாத்திரையை வழங்கியுள்ளார். அந்த மாத்திரையைச் சாப்பிட்ட கருப்பண்ணன், மல்லிகா, தீபா, குப்பம்மாள் ஆகியோர் மர்மநபர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்டனர். அப்போது அங்கிருந்த கருப்பண்ணனின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த சென்னிமலை அம்மாபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) என்பவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக கூறி மாத்திரை சாப்பிட மறுத்து விட்டார்.
பின்னர், மாத்திரையை சாப்பிட்ட 4 பேரையும் மர்மநபர் எடுத்து வந்த ஒரு கருவி மூலம் சோதனை செய்வதை போல் நடித்து கொரோனா இல்லை என கூறியுள்ளார். இதற்கிடையில், மாத்திரை சாப்பிட்ட 4 பேருக்கும் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த தீபாவின் கணவர் பிரபு, 4 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், மல்லிகா வழியிலேயே இறந்து விட்டார். கருப்பண்ணன், தீபா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையிலும், குப்பம்மாள் சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குப்பம்மாளும், தீபாவும் நேற்று இறந்தனர்.
இச்சம்பவம் குறித்து கல்யாணசுந்தரத்தை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், கருப்பண்ணனிடம் கல்யாணசுந்தரம் சுமார் ரூ.15 லட்சம் கடன் வாங்கியிருந்ததும் தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கலில் கருப்பண்ணனுக்கும், கல்யாணசுந்தரத்திற்கும் பிரச்னை ஏற்பட்டதால், கருப்பண்ணணையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. இதற்கு கல்யாணசுந்தரம், அவரது மனைவியின் உறவினரான சென்னிமலை சரவணபூரி எம்.பி.என். காலனியை சேர்ந்த கல்லூரி மாணவரான சிதம்பரம் மகன் சபரி (20) என்பவர் மூலம் கொரோனா பரிசோதனை செய்வதாக நடித்து தென்னை மரத்திற்கு வைக்கப்படும் சல்பாஸ் மாத்திரையை கொடுத்து 3 பெண்களை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்யாணசுந்தரத்தையும், சபரியையும் போலீசார் கைது செய்தனர்.