க்ரைம்

இரவு முழுவதும் செல்போனில்...பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை!!

திண்டுக்கல் அருகே அதிகமாக செல்போன் உபயோகிப்பதை பெற்றோர் கண்டித்து வந்ததால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள காசிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணி, முருகேஸ்வரி தம்பதி. கொத்தனாராக வேலை பார்த்து வரும் சுப்பிரமணிக்கு சுதா என்ற மகள் உள்ளார். இவர் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

இந்நிலையில், சுதா அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த பழக்கத்தை விடுமாறு பலமுறை  பெற்றோர் சுதாவை கண்டித்துள்ளனர். அந்த வகையில் சம்பவத்தன்று காலையில் சுதா வழக்கம் போல் செல்போனை உயோகிக்க பெற்றோர் சுதாவை மீண்டும் கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து சுப்பிரமணி கட்டிட வேலைக்கும், அவரது மனைவி முருகேஸ்வரி கூலி வேலைக்கும் சென்றுவிட்டனர். பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்த சுதா அவர்கள் வீட்டை விட்டு கிளம்பியதும் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவ்வப்போது வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர் தன் மகள் மின்விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுது கூச்சலிட்டனர்.  பின்னர் இது குறித்து தகவல் அறிந்த  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுதாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக மாணவ, மாணவிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.