க்ரைம்

பொது ஏலத்தில் ஒருதலை பட்சமாக செயல்பட்ட அதிகாரிகள்... வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!!

Malaimurasu Seithigal TV

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட புதுப்பேட்டை காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான இடம் ஏலம் விடும்போது அதிகாரிகள் - பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம்  பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டையில் மிகவும் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமான 2 கடைகள் பொது ஏலம் விடுவதற்காக முன் அறிவிப்பு செய்யப்பட்டு ஏலம் விடும் பணிகள் நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி சரக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் வசந்தம், பண்ருட்டி சரக ஆய்வாளர் ஸ்ரீதேவி, செயல் அலுவலர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் பொது ஏலம் விடும் பணிகள் தொடங்கியபோது, கடைகள் ஏலம் விடுவதில் அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சம்பவ இடத்திற்கு வந்த புதுப்பேட்டை போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வெளிப்படை தன்மையுடன் ஏலம் விட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதனால் பொது ஏலம் விடும் பணி மூன்றாவது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

கோவிலில் எந்த ஒரு அடிப்படை வசதிகள்  இல்லாமல் கோவில் சுவர்கள் சிதலமடைந்தும்  மேற்கூரைகள்  பல்வேறு  இடங்களில் சேதம் அடைந்ததும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள்  வருகை இன்றி காணப்படுகிறது,

வருமானம்  ஈட்ட நினைக்கும்  அறநிலையத்துறை அதிகாரிகள் சேதமடைந்தள்ள இக்கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்காதது என்? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.