க்ரைம்

பட்டா பெயர் மாற்றம் செய்ய கையூட்டு...  கிராம நிர்வாக அலுவலர் கைது!!

Malaimurasu Seithigal TV

தஞ்சாவூரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

தஞ்சாவூர் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் குருவாடிப்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவை பெயர் மாற்றம் செய்ய கடந்த ஆக.3 -ம் தேதி இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில்,  குருவாடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வீரலெட்சுமி, இளங்கோவனை தொடர்பு கொண்டு பட்டா மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசித்துள்ளார். இது குறித்த விஷயங்களை இளங்கோவனின் நிறுவன மேலாளர் அந்தோணி யாகப்பா பொறுப்பில் எடுத்துள்ளார். அப்போது மூன்று பட்டாவையும் பெயர் மாற்ற தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்தோணி யாகப்பா தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆலோசனையின்படி ரூ.10 ஆயிரம் ரசாயண பவுடர் தடவிய பணத்தை போலீஸார் கொடுத்து அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் அந்தோணி யாகப்பா, கிராம நிர்வாக அலுவலரிடம் போனில் பணத்தை எங்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு தஞ்சாவூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் உள்ளதாக கூறியுள்ளார். 

இதையடுத்து அந்தோணியாகப்பா, இ-சேவை மையத்துக்குள் சென்று ரூ.10 ஆயிரம் பணத்தை வீரலட்சுமியிடம் வழங்கியபோது, அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். தற்போது, கைதான வீரலட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.