க்ரைம்

திருநங்கையை கொன்று முட்புதரில் வீசிய மர்ம நபர்கள்..! இறப்பதற்கு முன்பு வெளியான ஆடியோ..!

என்னை காப்பாற்றுங்கள் என கதறிய திருநங்கையின் ஆடியோ வைரல்...!

Malaimurasu Seithigal TV

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி  பகுதிக்குட்பட்ட பொன்நகரை சேர்ந்தவர் அர்ஜூனன் என்கிற பனிமலர். திருநங்கையான இவர், புவனகிரி அருகே உள்ள தையாகுப்பம் புற்று மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்நிலையில், பனிமலர் கடந்த திங்கட்கிழமையன்று நள்ளிரவு சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் பகுதியில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரங்கிப்பேட்டை போலீசார் பனிமலர் உடலை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பனிமலரை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி படுகொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பனிமலர் உடல் பிரேத பரிசோதனைக்காக  சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பனிமலரின் உறவினர் முத்தரசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்தது யார்?எதற்காக கொலை செய்யப்பட்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், பனிமலர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் தனது செல்போன் மூலம் சக திருநங்கைகளை தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ வெளிவந்துள்ளது. அந்த ஆடியோவில்  அவர், என்னை சிலர் கத்தியால் வெட்டுகிறார்கள், முகமெல்லாம் வலிக்கிறது. என்னை காப்பாற்றுங்கள் என்று கதறியபடி கூறி இருந்தார். அதனை கேட்ட சக திருநங்கைகள் நீ எங்கு இருக்கிறாய் என்று பனிமலரிடம் கேட்டனர். அதற்கு அவர், நான் முட்லூரில் இருக்கிறேன். சீக்கிரமாக வந்து என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியபடி செல்போனில் கதறி உள்ளார். அதற்கு சக திருநங்கைகள் நாங்கள் வருகிறோம் என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே போன் கட் ஆனதால் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததுள்ளது. இதனிடையே சக திருநங்கைகள் சம்பவ இடத்துக்கு செல்லும் முன்பு பனிமலர் கொலை செய்யப்பட்டு இருந்துள்ளதார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்த பனிமலர் இறுதியாக செல்போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த செல்போன் ஆடியோவை வைத்து காவல் துறையினர் தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து பேசிய மற்ற திருநங்கைகள், எங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. இதுபோன்று நள்ளிரவில் ஒரு திருநங்கை கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநங்கைகளின் பாதுகாப்பை தமிழக முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நள்ளிரவில் திருநங்கை ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.