பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் புகாரை வாபஸ் வாங்கும் படி காவல் நிலையம் வந்து பெண் காவலரை திமுகவினர் மிரட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி சாலிகிராமம் தசரதபுரத்தில் நடைபெற்றது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு 129-வது வட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகளான சாலிகிராமம் சரோஜினி பாய் தெருவை சேர்ந்த பிரவீன்(23) மற்றும் சின்மயா நகர், அண்ணா தெருவை சேர்ந்த ஏகாம்பரம்(24) ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்து ஆபாசமாக பேசினர்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக நிர்வாகிகளான இருவரையும் திமுக தலைமை கட்சியை விட்டு நீக்கியது. அதன் பின்பு பிரவீன் மற்றும் ஏகாம்பரமும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சமீபத்தில் இருவரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு இன்று முதல் விசாரணைக்கு வரகின்றது. இந்நிலையில், குற்றப்பத்திரிகை வழங்கும் முன்பே புகாரை வாபஸ் வாங்க சொல்லி நேற்று திமுகவினர் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்குள் சென்று பாதிக்கப்பட்ட பெண் காவலரை மிரட்டி உள்ளனர்.
கேகே நகர் வடக்கு பகுதி துணைச்செயலாளர் விஜயகுமார் (எ) வாட்டர் விஜய் என்பவர் தனது ஆதரவாளர்களோடு நேற்றிரவு காவல் நிலையம் சென்று பாதிக்கப்பட்ட பெண் காவலரை மிரட்டி புகாரை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டியுள்ளனர்.
மேலும், விருகம்பாக்கம் எம்எல்ஏ காவல்துறை அதிகாரிக்கு போனில் புகாரை வாபஸ் வாங்க மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவமானது தற்போது காவல் துறையினர் மத்தியில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க:“ எக்காரணம் கொண்டும் சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது ; காவல்துறையினர் பாரபட்சம் பார்க்கக்கூடாது” - விக்ரமராஜா