க்ரைம்

சாராய வழக்கில் நாட்டாமையை தூக்கிய போலீசார்... நாட்டாமை இல்லாததால் நின்ற திருமணம்!!

Malaimurasu Seithigal TV

வேலூர் மாவட்டத்தில் தாலி எடுத்துக் கொடுக்க வேண்டிய நாட்டாமை சாராய வழக்கில் கைதானதால் நடக்கவிருந்த திருமணமே பாதியில் நின்று போனது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள அத்தியூர் ஊராட்சியில், நாட்டாமையாக செயல்பட்டு வருபவர் தான் சேகர் என்கிற சங்கர். குருமலை, வெள்ளக்கல் மலை, நச்சிமேடு மலை ஆகிய மலை கிராமங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் தொடங்கி, கோயில் திருவிழா, துக்க நிகழ்ச்சி என அனைத்து விழாக்களுமே நாட்டாமை வந்தால் தான் நிறைவு பெறுமாம்.

இந்நிலையில், நாட்டாமையின் அண்ணன் மகன் வசந்த் என்பவருக்கும் ஜமுனா முத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 9-ம் தேதியன்று திருமணம் நடைபெறுவ தாய் இருந்தது.  சித்தப்பாவும், நாட்டாமையுமான சங்கர், தாலி எடுத்துக் கொடுத்தால் தான் திருமண வாழ்க்கை சிறக்கும் என காத்திருந்தார் வசந்த். ஆனால் திருமணத்துக்கு கிளம்பிய சங்கரை சாராய வழக்கில் கைது செய்து கொத்தாக தூக்கிச் சென்றனர் போலீசார். 

இதனால் அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார், அரியூர் காவல்நிலையத்துக்கு சென்று தங்கள் நாட்டாமையை விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார் திருமண வீட்டாரை திருப்பி அனுப்பினர்.

தாலி எடுத்துத் தர வேண்டிய நாட்டாமையே, கைது செய்யப்பட்டதால், மணமக்களின் உறவினர்கள் நடக்கவிருந்த திருமணத்தையே தடுத்து நிறுத்தி விட்டு, அவரவர் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். நாட்டாமை கைது செய்யப்பட்டதால் திருமணம் தடை பட்டது, இதுவே முதல் முறை எனக் கூறும் மக்கள் நாட்டாமையின் விடுதலையை எதிர்நோக்கி காத்திருந்தனர். 

ஆனால் சங்கர், சாராய வழக்கில் கைதானதால், அவருக்கு நாட்டாமை பதவி பறிபோனதாகவும், மீண்டுமொரு நாட்டாமை வரும் வரை, நிகழ்ச்சிகள் நடத்துவது சிரமம் என்றும், அந்த பகுதியில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.