500 ரூபாய் நோட்டுகளாக ₹ 90 லட்சம் கொடுத்தால் ₹ 1 கோடி தருவதாக புரோக்கரை நியமித்து மோசடி: பணத்துடன் வந்த முன்னாள் கடற்படை அதிகாரியை மிரட்டி ₹ 15 லட்சம் பணத்தை மிரட்டி பறித்த ஆயுதப்படை பெண் இன்ஸ்பெக்டரின் செயல் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி ₹.2 ஆயிரம் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் அதனை மாற்றி கொள்ள செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கி உள்ளது.
இந்நிலையில் அதை தங்களுக்கு சாதகமாக மாற்ற சிலர் அனைத்து விதத்திலும் முயற்சித்து வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளை தடுக்க வேண்டிய போலீசாரே மூலையாக செயல்பட்டு மோசடி செய்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது.
விசாகப்பட்டினம் ஆயுதப்படையில் இன்ஸ்பெக்டராகவும் போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் துணை தலைவராகவும் இருப்பவர் சுவர்ணலதா. இவர் ₹ 2000 நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி மோசடி செய்து பணம் பறிக்க திட்டம் தீட்டினார். இதற்காக தனக்கு கீழ் பணிபுரியும் ஊர்காவல் படையை சேர்ந்த மேகர், சீனு ஆகியோருடனும் புரோக்கர் சூர்யா என்பவருடனும் சேர்ந்து திட்டம் வகுத்தார். இதற்காக சுவர்ணலதா ₹ 500 நோட்டுகளாக 90 லட்சம் பணம் கொடுத்தால் 1 கோடி ₹ 2000 நோட்டுகள் தருவதாக சிலரை நம்ப வைத்து அவர்களை அழைத்து வரும்படி கூறினார்.
அதன்படி சூர்யா விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு மற்றும் ஸ்ரீதர் ஆகியோரிடம் ₹ 500 நோட்டுகள் 90 லட்சம் கொடுத்தால் 1 கோடி ₹ 2000 நோட்டுகளாக தருவதாக கூறி உள்ளார். இதனை நம்பிய அதிகாரிகள் பணத்துடன் காரில் வந்தபோது ஏற்கனவே திட்டமிட்டபடி மேகர், சீனு அங்கு சென்று இந்த பணம் திருட்டு, கொள்ளை அடித்த பணமா என மிரட்டி வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சுவர்ணலதா வழக்கு இல்லாமல் விட வேண்டும் என்றால் ₹ 15 லட்சம் தர வேண்டும் எனவும், இல்லாவிட்டால் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டி பணத்தை பெற்றுள்ளார்.
இதனால் பணத்தை இழந்த கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு மற்றும் ஸ்ரீதர் இதுகுறித்து விசாகப்பட்டினம் காவல் ஆணையர் திருவிக்ரம் வர்மாவிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல் ஆணையர் திருவிக்ரம்வர்மா விசாரனை மேற்கொண்டதில், சுவர்ணலதா திட்டமிட்டு ஏமாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து, துவரகா நகர் காவல் நிலையத்தில் சுவர்ணலதா, டிரைவர் மேகர், ஊர்காவல் படை வீரர் ஸ்ரீனு, புரோக்கர் சூர்யா மீது ஜாமினில் வெளியே வரமுடியாத மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் 386 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நான்கு பேரையும் கைது செய்தனர்.
சுவர்ணலதா ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் தனது எல்லைக்குள் இல்லாவிட்டாலும் பலரை மிரட்டி வழக்கு பதிவு செய்து பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | "ஆளுநர் ஒரு ஊடு பயிர் மாதிரி தான், முக்கியமான பயிர் கிடையாது" கே எஸ் அழகிரி விமர்சனம்!