க்ரைம்

கொடநாடு வழக்கு: தனபாலிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்!!

Malaimurasu Seithigal TV

கொடநாடு விவகாரம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடியினா் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்தது. அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு பங்களாவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இவ்வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் கனகராஜ் சேலத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் செல்போன் தடையங்களை அளித்தும், சாட்சியங்களை மாற்றுதல், வழக்கை திசை திருப்புதல், சாட்சியங்களை அளித்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினரான ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தும் தனபால், ரமேஷ் ஆகியோர் பயன்படுத்திய செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோர் நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ள நிலையில் கனகராஜன் சகோதரர் தனபாலிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கூறி சிபிசிஐடி போலீசார் சார்பில் உதகை மாவட்டம் அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதரிடம் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. 

மேலும், விரைவில் தனபாலிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.