க்ரைம்

அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக தொடரும் ஐ.டி.,சோதனை!

Tamil Selvi Selvakumar

அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுப்பணி மற்றும்  நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டும் வருவாய்க்கு முறையான கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில்,  அவருக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் நெருக்கமானவர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை முதல் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலைக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில், பல முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத 18 கோடி ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் வீட்டிலும் 5வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. 

அதேபோல் தொழில் அதிபர் அபிராமி ராமநாதன் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நேற்று நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கணக்கில் வராத 250 கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கரூரில் அமைச்சர் எ.வ. வேலுக்கு தொடர்புடையவர்கள் என கூறப்படும் சுரேஷ் என்பவருடைய வீட்டிலும், காந்திபுரத்தில் உள்ள நிதி நிறுவனத்திலும் 5ம் நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமார் இல்லம், அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம், சௌரிபாளையம் காசா கிரான்ட் அலுவலகம் ஆகிய 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து காசா கிராண்ட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் இல்லம், மீனா ஜெயக்குமார் இல்லம் ஆகிய இடங்களில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றி இருக்கும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.