க்ரைம்

புத்திமதி சொன்ன தலைமை ஆசிரியர்... கஞ்சா போதையில் குத்திக் கிழித்த மாணவன்...

அரசு பள்ளி மாணவன் ஒருவன், தலைமை ஆசிரியரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளான். மாணவனுக்கு புத்திமதி சொன்ன ஆசிரியருக்கு கொடூர நிலை ஏற்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

விழுப்புரம் : கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வந்த இந்த பள்ளியில் மாணவர்களில் சிலர் மோசமான பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளனர். 

12-ம் வகுப்பு படித்து வந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு மட்டம் போடுவதும், புகை, மது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி அடிதடியில் இறங்கி வந்துள்ளனர். 

பள்ளியில் ஒழுங்கீனமாக செயல்படும் மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் தனியாக அழைத்த அறிவுரை வழங்கி உள்ளார். ஆனால் தலைமை ஆசிரியரின் பேச்சை துளியும் மதிக்காத இந்த மாணவர்கள் மீண்டும், மது, கஞ்சா பயன்படுத்தியவாறே வகுப்புக்குள் சென்றுள்ளனர். 

இதுகுறித்து போலீசில் தகவல் தெரிவித்துள்ளார் தலைமை ஆசிரியர் சேவியர். அவர்களும் சர்ச்சைக்குரிய மாணவர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த 12-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தலைமை ஆசிரியருக்கே பாடம் புகட்டுவதற்கு காத்திருந்தான். 

அதன்படி செவ்வாய்க்கிழமையன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவன் சகமாணவியிடம் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தகராறு செய்தான். உடனே இந்த சம்பவத்தை அறிந்து வந்த தலைமை ஆசிரியர் மீண்டும் அந்த மாணவனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தன்னை காட்டிக் கொடுத்த கோபத்தில் இருந்த மாணவன் மறைத்து வைத்த கத்தியை எடுத்து தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகரின் தலையில் ஓங்கி குத்தினான்.

மாணவனால் தாக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடிய தலைமை ஆசிரியரை அருகில் இருந்தவர்கள் கண்டமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தங்களிடம் படிக்கும் மாணவர்கள் படிப்பை கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, நல்ல பழக்கவழங்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என குறைந்த பட்ச ஆசையைக் கொண்டிருந்த ஆசிரியருக்கு கிடைத்த பரிசா இது...