க்ரைம்

பழங்குடி மாணவிக்கு தொல்லை; அதிமுக பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Malaimurasu Seithigal TV

குளித்தலை நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி. செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

கரூர் மாவட்டம் குளித்தலை ரெயில் நிலையம் அருகே சண்முகா நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு மாணவி, நர்சிங் படிப்பில் சேர்ந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவியை, கல்லூரியின் சட்ட ஆலோசகரும், கல்லூரி நிறுவனரின் சகோதரருமான அ.தி.மு.க. பிரமுகர் வக்கீல் செந்தில்குமார், கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு அளித்து உள்ளார்.

பின்னர் கல்லூரி விடுதியில் இருந்து அவரை கடத்திச் சென்று பல்வேறு இடங்களில் வைத்து தொடர் பாலியல் தொந்தரவு அளித்து இருக்கிறார். இந்த சம்பவத்துக்கு விடுதி வார்டன் அமுதவள்ளியும், செந்தில்குமாருக்கு உடந்தையாக இருந்துள்ளனர். பல நாட்கள் கழித்து அவர்களிடம் இருந்து தப்பிய அந்த மாணவி, கடந்த 2022ம் ஆண்டில் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் குளத்தலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து, செந்தில்குமார், அமுதவள்ளி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

கீழ்கோர்ட்டின் இந்த உத்தரவை ரத்து செய்து, தங்களுக்கு ஜாமீன் கேட்டு அவர்கள் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் மனுதாரரான செந்தில்குமார் பிரபல அரசியல் கட்சியில் இருப்பதால், இந்த வழக்கின் சாட்சிகளை எளிதாக கலைத்துவிடுவார். தற்போது அவர் சிறையில் இருந்துவரும்போதே பாதிக்கப்பட்ட மாணவி தரப்பினரை அவரது ஆட்கள் மிரட்டி வருகின்றனர். எனவே வழக்கு விசாரணை முடியும் வரை செந்தில்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குளித்தலை நர்சிங் கல்லூரியில் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தனது குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசையில் சேர்ந்து பயின்றுள்ளார். அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்து சம்பவம், கடுமையானது. ஒவ்வொரு மாணவரும் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில்  தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் அங்கு நுழைகின்றனர். குறிப்பாக பெண் கல்வி நிறுவனங்கள், அங்கு படிக்க வரும் மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பை தருவது அவர்களின் கடமை. கல்வி நிறுவனங்களில் பாலியல் சுரண்டல் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

அந்த வகையில் மனுதார்கள் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. எனவே செந்தில்குமார், அமுதவள்ளி ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகின்றன. அவர்கள் மீதான வழக்கு விசாரணை முடியும் வரை சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கை கரூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.