ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த 100க்கும் மேற்பட்ட பயணிகளிடம் தங்கம் கடத்தி உள்ளார்களா என சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உணவு, குடிநீர் கூட இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து பயணிகள் விமானம் இன்று காலை 8 மணி வந்தது. விமானத்தில் 186 பயணிகள் வந்து இருந்தனர். இந்த விமானத்தில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை வெளியில் செல்ல விடாமல் விமான நிலைய சுங்கதுறை அலுவலகத்திற்குள் வைத்துள்ளனர். ஒவ்வொருவராக தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து, முழுமையாக சோதனைகள் நடத்தி வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை பகல் 2 மணி வரையில் முடியவில்லை. மேலும் நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகளிடம் பெரும் அளவு தங்கம் எதுவும் கைப்பற்றப்பட வில்லை என கூறப்படுகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தில் நிறுத்தி வைத்து பல மணி நேரமாக தொடர்ந்து சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து வைத்திருக்கும் 100க்கும் மேற்பட்டவர்களில் தங்கம் கடத்தும் குருவிகள் ஒரு சிலர் மட்டுமே இருப்பதாகவும் மற்றவர்கள் சாதாரண பயணிகள் என்றும் கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு பல மணி நேரமாக உணவு, குடிநீர் வசதி கூட இல்லாமல் தவித்துக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.