க்ரைம்

காதலன் கைதானதால், வன்முறையில் ஈடுபட்ட காதலி... சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு!!

Malaimurasu Seithigal TV

சென்னையில், திருட்டு வழக்கில், காதலன் கைதான ஆத்திரத்தில், சாலையில் சென்ற அப்பாவி இளைஞனை கத்தியால் கீறியுள்ளார், 17 வயது சிறுமி.

சென்னை வியாசர்பாடி அருகே உள்ள மெகிசின்புறம் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ்வரன் (30). இவர் 11-ம் தேதியன்று இரவு சுமார் 10 மணியளவில் வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் தலையில் ஹெல்மெட் அணிந்தவாறு இரண்டு பேர் பல்சர் பைக்கில் மின்னல் வேகத்தில் முறுக்கிக் கொண்டு சென்றனர். இதைப் பார்த்த விக்கி அச்சத்துடன் அவர்களிடம் இருந்து விலகி நடந்தார். 

ஆனால் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்த நபர், ஒரு கத்தியை எடுத்து விக்கியின் தலையில் வெட்டி விட்டு பயங்கர சத்தத்துடன் கத்திவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளனர். மேலும் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களையும், காரையும் அடித்து நொறுக்கிய இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினர்.

தலையில் காயமடைந்து துடித்த விக்னேஷை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலீசார், சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் இறங்கினர். 

இந்த விசாரணையில் பல்சர் பைக்கை ஓட்டியது 17 வயது சிறுவன்  என்பதும், பின்னால் கத்தியுடன் அமர்ந்திருந்தது 17 வயது சிறுமி என்பதும் தெரியவந்தது. உடனே அவர்களைப் பிடித்து விசாரித்தபோது தெரியவந்துள்ளது.

மேலும் விசாரித்ததில், சென்னை வியாசர்பாடி பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அடித்து பணம் பறித்த வழக்கில், வியாசர்பாடி முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த கவுதம் என்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும், கவுதம் கைதானதை அறிந்த அவரது 17 வயது காதலி அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், கடும் ஆத்திரத்தில் இருந்ததாகவும், இதனால் தன் நண்பனுடன் பைக் ரைடு சென்று, சாலையில் உள்ள வாகனங்களை உடைத்து தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்

அதோடு, சாலையில் நடந்து சென்ற விக்னேஷையும் தலையில் கத்தியால் கீறி விட்டு சென்றதையும் போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கவுதமின் காதலியையும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு சிறுவனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிருவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர் காவல்துறையினர்.