க்ரைம்

மக்களே உஷார்! வாட்ஸ் அப் டிபி யை வைத்து லட்சக்கணக்கில் பணத்தைப் பறிக்கும் மோசடி கும்பல்...!!

Malaimurasu Seithigal TV

வாட்ஸ் அப் டிபி மற்றும் போலியாக உருவாக்கப்பட்ட குரல் பதிவு ஆகியவற்றை  பயன்படுத்தி  லட்ச கணக்கில் மோசடி செய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சைபர் கிரைம் கும்பல் நாளுக்கு நாள் பல்வேறு விதமாக நூதன முறையில் மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். சைபர் கிரைம் கும்பல் தற்போது கையில் எடுத்திருப்பது சமூக வலைதளங்கள். பேஸ்புக்கில் போலியாக ஐடிகளை தயாரித்து மோசடி செய்வது, டெலிகிராமில் ஆபாசமாக போட்டோக்களை எடுத்து விற்பனை செய்வது, லைக் அண்ட் ரிவியூ கொடுத்தால் பணம் எனக் கூறி டெலிகிராமில் ஆன்லைன் வேலை மோசடி என அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது வாட்ஸ் அப் செயலியில் தங்களுடைய எண் என்பதை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக டிஸ்ப்ளே பிக்சர் வைத்துக் கொள்வார்கள். இவ்வாறு டிபி யில் உறவினர்கள், நண்பர்கள் புகைப்படத்தை வைத்து மோசடி செய்வது அதிகரித்து வருகிறது.  சமூக வலைதளங்கள் மூலமாக பணக்காரர்களாக இருக்கும் நபர்களை மோசடிக் கும்பல் தேர்ந்தெடுக்கிறது. குறிப்பாக வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் படத்தையும், தகவல்களையும் அவர்கள்  பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக பதிவுகள் அடிப்படையாக வைத்து தகவல்களை சேகரிக்கின்றனர். அதன் பின் சமூக வலைதளங்களில் உள்ள புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வாட்ஸ் அப்பில் டிபி ஆக வைக்கின்றனர்.

சிலநேரங்களில் அவர்கள் புகைப்படத்தை வைத்து போலி ஆவணங்கள் மூலமாக புதிய சிம் கார்டுகள் அல்லது இ சிம்கார்டு பெற்று, அந்த எண்ணில் வாட்சப் செயலியை டவுன்லோடு செய்து மோசடி செய்கின்றனர்.

வாட்ஸ் அப் மூலமாக உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பேசுகின்றனர். அதன் பின் இந்தியாவில் குறிப்பிட்ட நபருக்கு பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் எனவும் வெளிநாட்டில் இருப்பதால் உதவுமாறு சாட் செய்கின்றனர். மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் உறவினர்கள் என வாட்ஸ் அப் டிபி யை பார்த்து நம்பி விடுகின்றனர்.

மேலும் நம்ப வைப்பதற்காக அவர்களுடைய குரலை சமூக வலைதளங்களில் ஏதேனும் வீடியோ பதிவு மூலம் கண்டறிந்து, அதே போன்ற குரலில் வாய்ஸ் மெசேஜ் மற்றும் வாட்ஸ் அப் காலில் பேசி நம்ப வைக்கின்றனர். அதன் பிறகு அவர்கள் கூறும் அக்கவுண்டிற்கு நம்பி பணத்தை அனுப்பி ஏமாறுகின்றனர். இது போன்று சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது சித்தி வாட்ஸ் அப் காலில் பேசி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கேட்டதாகவும், அதனை நம்பி அவர்கள் கூறிய நபரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்தி ஏமாந்ததாகவும் சென்னை சைபர் கிரைம் போலிசாரிடம்  புகார் அளித்துள்ளனர்.

குறிப்பாக தனது உறவினர் குரலில் பேசியதால்தான் மிகவும் நம்பிக்கையுடன் பணத்தை பரிவர்த்தனை செய்து ஏமாந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தன் உடன் இருப்பவர்கள் தெரியாமல் இந்த உதவியை கேட்பதாக கூறி அவர்களுக்கு தொடர்பு கொண்டு இதைப் பற்றி கேட்க வேண்டாம் என தங்களை கண்டுபிடிக்க முடியாத வகையில் மோசடி கும்பல் பேசியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்காவிலிருந்து பேசும் என்பதால் கால நேரங்களையும் சரியாக கணித்து வைத்து விடியற்காலையில் வாட்ஸ் அப் கால் மூலமாக பேசி இந்த மோசடியை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.

சைபர் கிரைம் குற்றவாளிகள் தொலைபேசி மூலமாக தங்களுக்கு கொரியர் மூலமாக போதைப் பொருள் வந்திருக்கிறது. இது பற்றி நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதற்காக பல லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் புது யுக்தியை கையாண்டு வருகிறது. 

அதில் ஒன்றுதான் மும்பை போலீஸ் என்று காவல்துறை அதிகாரிகளுடைய அலுவலகம் எப்படி இருக்குமோ அதே போன்று வடிவமைத்து காவல்துறையினர் உடை அணிந்து வீடியோ கால் மூலமாக பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு கொரியர் நிறுவனத்திலிருந்து உங்களுக்கு புலித்தோல் வந்திருக்கிறது.

இது  தொடர்பாக தங்களை கைது செய்யாமல் இருப்பதற்காக உடனடியாக 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரி போன்று மிரட்டும் தனி கும்பல் உருவாகியுள்ளது. இது பற்றி தெற்கு மண்டல சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார்களும் குவிந்து வருகிறது. இதனை அடுத்து சைபர் கிரைம் அதிகாரிகள் அவர்கள் பயன்படுத்திய எண், இ சிம் ஆகிய எண்கள் தொடர்பாக விசாரணை செய்தபோது  இவற்றை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக மோசடி செய்து வரும் இந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் நண்பர்கள் வாட்ஸ் அப் கால் மூலம் திடீரென உதவி கேட்டால் கவனமாக இருந்து உதவுமாறு பொது மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல போலீஸ் அதிகாரிகள் எனக் கூறி மிரட்டுபவர்கள் குறித்தும் காவல் நிலையங்களில் உரிய புகார்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.