க்ரைம்

மனைவியை அபகரித்ததுமில்லாமல்.. கணவனை நிர்வாண போட்டோ எடுத்து மிரட்டிய கில்லாடி நண்பன்!!ஆத்திரத்தில் இருவர் கொலை!

ஆவடி அருகே மது விருந்து நடந்த இடத்தில் இரட்டை கொலை செய்தவர்களை 24 மணி நேரத்தில் பிடித்த தனிப்படை போலீசாரை ஆவடி மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராடினார். 

Tamil Selvi Selvakumar

ஆவடி வசந்தம் நகர், சிவகுரு தெருவை சேர்ந்தவர் சுந்தர்-பிரியா தம்பதி. ஆட்டோ டிரைவரான  இவருக்கு இரு குழந்தைகள் உள்ளன. அதே போன்று ஆவடி நேரு பஜார், மசூதி பின்புறத்தில் வசித்தவர் அசாருதீன்-கவுசிக் தம்பதி. மீன் கடை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். சுந்தர், அசாருதீன்  இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.

இதற்கிடையில், கடந்த 12ந்தேதி இரவு ஆவடியில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான ஓ.சி.எப் மைதானத்தில் சுந்தர், அசாருதீன் இருவரின்  தலை, முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதில், ஆவடி, கொள்ளுமேடு, இரட்டை குட்டை தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் என்பவர்  தனது நண்பர்கள் மற்றும் கூலிப்படையினரை ஏவி சுந்தர், அசாருதீன் ஆகியோரை கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், மணிகண்டனுக்கு பிரிசில்லா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.  இதற்கிடையில், 2018ம் ஆண்டு மணிகண்டன் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, ஆவடி, பெரியார் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகன் என்பவருடன் பிரிசில்லாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜெகன், பிரிசில்லாவை தனியாக அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார். இதன்பிறகு, மணிகண்டன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில், சமீப காலமாக பிரிசில்லா அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்து உள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சை செய்ய பணம் இல்லாமல் ஜெகன் சிரம்பட்டு வந்து உள்ளார்.

இதனால் கடந்த 4ந்தேதி மணிகண்டனை ஆட்டோவில் கடத்தி சென்ற ஜெகன், அவரிடம் பிரிசில்லாவின் மருத்துவ செலவிற்கு 1லட்சம் ரூபாய் பணமும், ஆந்திராவுக்கு சென்று 2கிலோ கஞ்சா வாங்கி தரும்படியும் ஜெகன் கேட்டு உள்ளார். பின்னர், மணிகண்டனை நிர்வாணப்படுத்தி ஜெகன் வீடியோ எடுத்துள்ளார். அப்படி ஒருவேளை நீ பணம், கஞ்சா இரண்டையும் தராவிட்டால், அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கெல்லாம்  ஜெகனின் நண்பர்கள் சுந்தர், யாசின் ஆகியோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.

அப்போது,  ஜெகனிடம்  இருந்து தப்பிக்க மணிகண்டன் 10நாளில் பணம் ஏற்பாடு செய்து தருகிறேன் என கூறி உள்ளார். அதன் பிறகு, மணிகண்டனை ஜெகன் விடுவித்து உள்ளார். தனது மனைவியை அபகரித்ததோடு மட்டுமல்லாமல், தன்னை நிர்வாணப்படுத்தி பணம், கஞ்சா கேட்டு மிரட்டியதால், ஜெகனை தீர்த்துக்கட்ட மணிகண்டன் முடிவு செய்துள்ளார்.

அதற்காக  நண்பர்கள், கூலிப்படையினர் என 8 பேரை மணிகண்டன் ஏற்பாடு செய்து உள்ளார்.  பிறகு சம்பவதன்று மணிகண்டன்,  நான் பணம், கஞ்சா ஏற்பாடு செய்துவிட்டேன், உன்னிடம் கொடுக்க வேண்டும் என ஜெகனிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய ஜெகனும் தனது நண்பர்களான சுந்தர், அசாருதீனுடன் இணைந்து ஆவடி, ஓ.சி.எப் மைதானத்திற்கு பணத்தை வாங்க வந்துள்ளார்.

பின்னர்,  அனைவரும்  மது அருந்தி கொண்டிருந்தபோது, மணிகண்டன் ஏற்பாடு செய்த நண்பர்களும், கூலிப்படையினரும் திடீரென்று அங்கு வந்து ஜெகனை கொல்ல முயன்றனர். அப்போது, சுந்தர், அசாருதீன் ஆகியோர் கூலிபடையினரை தடுத்தபோது, ஆத்திரம் அடைந்த  கூலிப்படையினர் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதற்கிடையில், அங்கிருந்து ஜெகன் தப்பி ஓடி உயிர் பிழைத்து கொண்டார் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து, உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் கூலிப்படையினர் என மொத்தம் 9பேரையும் இன்று கைது செய்தனர். மேலும், இவர்கள் அனைவரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரட்டை கொலை நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை ஆவடி மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராடியுள்ளார்.