க்ரைம்

திருச்சி பிரபல ஜுவல்லரியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை!

Malaimurasu Seithigal TV

திருச்சி மாநகரில் இரண்டு இடங்களில் உள்ள பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையில் 5 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி நகைக் கடையில் முதலீடு செய்பவர்களுக்கு இரண்டு சதவீதம் வட்டி தருவதாக பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த விளம்பரங்கள் மூலம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

அதை நம்பி தமிழகம் முழுவதும் உள்ள கிளைகளில் பலர் ஆயிரம் ரூபாய்  முதல் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக முதலீடு செய்தவர்களுக்கு சரிவர வட்டி கொடுக்காமல் இழுக்கடித்துள்ளனர்.

மேலும் திருச்சி உள்ளிட்ட  கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் மற்றும் நகை சீட்டு போட்டவர்கள் திருச்சி கடை முன்பு முற்றுகை மற்றும் மறியல் போராட்டங்களில் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க காவல்துறையினர்  அறிவுறுத்தினர். கடந்த இரு தினங்களாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து தாங்கள் பாதிக்கப்பட்டதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்து புகார் அளித்தனர்.

இந்நிலையில் இன்று மாலை முதல் திருச்சி, சென்னை, பாண்டிச்சேரி மதுரை உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள கிளைகளிலும், மற்றும் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜூக்கு சொந்தமான மூன்று வீடுகள் என 11- இடங்களில் சோதனை நடைபெற்றது,

சோதனை நடைபெறும் இடங்களில் டிஎஸ்பி தலைமையிலான  திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சியில் மலைக்கோட்டை பகுதி மற்றும் கரூர் பைபாஸ் சாலை என இரண்டு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி நகைக்கடைகளிலும் போலீசார் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.